நித்திரவிளை , ஜூன் 28 –
நித்திரவிளை அருகே தெருவு முக்கு பகுதி சேர்ந்தவர் ஹரிகுமாரன் (63). ஓய்வு பெற்ற செயல் அலுவலர். இவரது மனைவி சித்த மருத்துவர். இவர்களுக்கு தெருவு முக்குப் பகுதியில் நாட்டு மருந்து கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சுரேந்திரன் (49) என்பவர் வந்துள்ளார். இவர் இந்த கடை தனக்கு உரிமை பட்டது என்று கூறி தகாத வார்த்தைகள் பேசி ஹரிகுமாரனை தாக்கி தள்ளி உள்ளார்.
பின்னர் கடைக்குள் புகுந்து கடையில் வைத்திருந்த மருந்து பொருட்களை எடுத்து வீசி பீரோவை உடைத்துள்ளார். மேலும், பீரோவில் பத்திரப்படுத்தி இருந்த மருந்து எண்ணெய்களை கீழே தள்ளி கடையை சூறையாடினார். இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் நாசம் ஆயின. தகவல் அறிந்து ஹரிகுமாரன் மனைவி சம்பவ இடம் வந்த போது அவரையும் சுரேந்திரன் தாக்கியுள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்த நித்திரவிளை போலீசார் சுரேந்திரனை மடக்கி பிடித்தனர். இது சம்பந்தமான புகாரின் பெயரில் நித்திரவிளை போலீசார் சுரேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான சுரேந்திரன் கொல்லங்கோடு நகராட்சியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது நித்திரவிளை காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி வழக்கு பதிவாகியுள்ளது. மேலும் குற்ற சரித்திர பதிவேட்டில் இவரது பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.