கோவை, ஜூலை 25 –
நான் முதல்வன் திட்டம் என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் மேம்பாடு மற்றும் உயர்கல்வி குறித்த பயனுள்ள மற்றும் விரிவான வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாகும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பற்றிய தகவல்கள் அடங்கிய வழிகாட்டுதல் புத்தகங்கள் வழங்குதல், மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள திறன் பயிற்சி, போட்டி தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் குறைக்கப்படுவதுடன் தங்களின் தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு சிறந்து வருகின்றனர்.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பயின்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் பெற்று இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ச்சியடைந்து இடம் பெற்றுள்ள 5 மாணவ மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்தினார்.
இதில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி க. பிருந்தா, Institute Of Hotel Management, CATERING TECHNOLOGY AND APPLIED NUTRITION (MADRAS) கல்வி நிறுவனத்தில் பி.எஸ்.சி (ஹோட்டல் மேனேஜ்மென்ட்) பாடத்திட்டத்திலும், அதே பள்ளியில் பயின்ற மாணவிகள் சி. தனுஷா ஸ்ரீ மற்றும் மு. சுஜாதா ஆகியோரும் எஸ்.எஸ். குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி ரா. லயதர்ஷினி ஆகிய மூன்று மாணவியர்களுகம் ஆடை வடிவமைப்புத் துறையில் உயர்கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான Footwear Design & Development Institute All India Selection Test-ல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவி வே. பிரியதர்ஷினி தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி தேர்வில் (NIFT) தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்கு சுமார் ரூ. 13 இலட்சம் செலவாகும் நிலையில் இம்மாணவியர்கள் கட்டணம் ஏதுமின்றி அரசின் உதவியுடன் இலவசமாக பயிலுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று ஆடை வடிவமைப்புத் துறையில் உயர்கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள எஸ்.எஸ். குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி ரா. லயதர்ஷினி தெரிவித்ததாவது: என் பெயர் லயதர்ஷினி, நான் சர்க்கார் சாமக்குளம், அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். இந்நிலையில் 12-ம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிப்பது என்ன மாதிரியான வேலைக்கு செல்வது என்ற விவரம் எதுவும் எனக்கு தெரியாமல் இருந்தது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என்னுடைய ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி ஆடை வடிவமைப்புத் துறையில் உயர்கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வினை எழுதினேன். (Footwear Design & Development Institute All India Selection Test) 5 பெற்றுள்ளேன். இதன்மூலம் இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான சென்னையில் உள்ள காலணி வடிவமைப்பு நிறுவனத்தில் (FDDI) B.Des உயர்கல்வி பயில்வதற்கு எனக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்த உயர்கல்வி பயில்வதற்கு சுமார் ரூ.13 இலட்சம் செலவாகும் நிலையில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் கட்டணமின்றி அரசின் உதவியுடன் இலவசமாக உயர்கல்வி பயில முடியும். மிக ஏழ்மையான குடும்பங்களிலிருந்து வரும் எங்களைப் போன்ற கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு நான் முதல்வன் திட்டம் வரப்பிரசாதமாக உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களை போன்ற மாணவியர்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.