நாகர்கோவில், ஆகஸ்ட் 20 –
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அறிவுசார் மையத்தில் இன்று நடைபெற்றது. பி.எஸ்.சி நர்சிங் மற்றும் செவிலியர் பட்டய படிப்பு முடித்த சுமார் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி தொடர்பான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. 3 மாத காலம் இந்த பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இந்த பயிற்சி முகாமை கலெக்டர் அழகு மீனா தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் முடிவடைந்து அதன் பின் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு ஜெர்மனியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் பலனடைவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கலெக்டர் அழகு மீனா கூறினார்.
இந்த பயிற்சி முகாம் நல்ல முறையில் நடைபெற அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மாணவிகளும் இந்த பயிற்சி முகாமில் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுடைய வாழ்வின் மேம்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த “நான் முதல்வன்” திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அழகுமீனா கேட்டுக்கொண்டார்.


