நாகர்கோவில், ஆக. 4 –
நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி பூச்சிவிளாகம் சந்திப்பு பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிறத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு தர்மபுரம் ஊராட்சி மூலமாக முறையே வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் மின்னிணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் தரப்பினர் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கில் அங்கு வந்து அவர்கள் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அதிகாரிகளை கண்டித்து நாகர்கோவில் – ஈத்தாமொழி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கருமையாக பாதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக கட்சியினர் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பல ஆண்டுகளாக தங்கள் இந்த பகுதியில் குடியிருந்து வரும் நிலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் நீதிமன்ற உத்தரவை காட்டி அதன் பேரில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
பொதுமக்கள் வீடுகளை இடிக்க அவகாசம் கேட்டனர். ஆனால் கோர்ட்டு உத்தரவு என்பதால் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினார். பின்னர் நீதிமன்றத்திற்கு பொதுமக்கள் தரப்பில் அவகாசம் கேட்டு கடிதம் தருமாறும், நீதிமன்றத்தின் தாக்கல் செய்து அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினார்கள்.



