நாகர்கோவில், ஜூலை 4 –
குமரி மாவட்டத்தில் விபத்துகளில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 100 சதவீதம் ஹெல்மெட் அணியும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே பள்ளிகள், அரசு அலுவலகங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு பதாகை ஒட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் கோணம் அரசு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாகர்கோவில் மாவட்ட போலீஸ் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை எஸ்.பி. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் “நோ ஹெல்மெட் நோ என்ட்ரி” என்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். எஸ்.பி. அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் மணிமேடை, வேப்பமூடு வழியாக டதி பள்ளியை வந்தடைந்தது. 200க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.