நாகர்கோவில், நவம்பர் 21 –
நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட நாகராஜா கோவில் மேலரதவீதி மற்றும் வடக்கு ரதவீதி பகுதியில் ரூ 7.50 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி செயற்பொறியாளர் ரகுராமன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகரில் பல்வேறு இடங்களில் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும். பொதுமக்கள் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கொட்டும் போது மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டு சாலையில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வடிகால்களில் தண்ணீர் முறையாக செல்ல பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.


