விழுப்புரம், ஆகஸ்ட் 9 –
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி மயிலம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சுகாதாரத்துறையில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, கலைஞரின் வரும்முன் காப்போம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த (02.08.2025) சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, அன்றைய தினம் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாம் நடத்தப்பட்டது.
இதன் தொடர் நிகழ்வாக இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி மயிலம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம். பேறுகால மருத்துவம். குழந்தை நல மருத்துவம், இதயநல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய்கான மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்தா மருத்துவம், உணவியல் ஆலோசனை ஆகிய 17 மருத்துவ சிகிச்சைகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களால் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் அனைத்து சிகிச்சைகளும் பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள். படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகளை இலக்காக கொண்டு இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 02.08.2025 முதல் தொடங்கி 01.11.2025 வரை 13 வட்டாரங்களிலும் (வட்டாரத்திற்கு தலா 3 முகாம்கள் வீதம்) 39 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாமில் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளை பெற்று தங்கள் உடல் நலனை நல்ல முறையில் பாதுகாத்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இம்முகாமில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) ரமேஷ் பாபு, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில்குமார், மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் மரு. தேன்மொழி மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் திருமதி தமிழ்செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.