தஞ்சாவூர், ஜூலை 7 –
தமிழக முதல்வரை நடிகர் விஜய் பேசுகிற பேச்சு எல்லாம் அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்த்துகிறது என்றார் அமைச்சர் கோவி. செழியன். தஞ்சாவூர் கிழவாசல் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் ஒரணியில் தமிழ்நாடு பரப்புரை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், தேர்தல் களம் வந்த போதெல்லாம் அதில் போட்டியிடாமல் விலகி நின்று நேரடியாக முதல்வர் நாற்காலி தான் என்ற எண்ணத்துடன் உள்ளவர். இவர் பரந்தூர் பிரச்சனையை கூறி முதல்வர் ஏன் வரவில்லை என கேட்கிறார். கடந்த ஒரு முறை விஜய் பரந்தூர் சென்ற போது கேரவன் வேனிலேயே உட்கார்ந்திருந்ததாகவும், இறங்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளை கூறினர்.
விஜய் அரசியலில் ஒரு கத்துக் குட்டி. மூத்த தலைவர் இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்கிற பேச்சு எல்லாம் அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை என்பதை யே உணர்த்துகிறது. அவருடைய மதிப்பீடு தவறு.
தமிழகம் முதல்வர் அனைத்து நிலைகளையும் உணர்ந்தவர். எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை அவருக்கு தெரியும். மத்திய அரசின் இடர்பாட்டுக்கு இடையிலும், தமிழ்நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் தமிழக முதல்வருக்கு மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். அது வரும் 2026 தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் அமைச்சர்.
அப்போது திமுக மத்திய மாவட்ட செயலரும் திருவையாறு தொகுதி எம்எல்ஏ வுமான துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் தொகுதி எம்பி ச. முரசொலி, தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் புண்ணிய மூர்த்தி, திமுக தலைமை கழக உறுப்பினர் செல்வம், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் துரை. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.