சென்னை, செப். 23 –
கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் நடத்தும் தையல் பயிற்சி மற்றும் அழகுக்கலை பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகை தேவயானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது: சைதாப்பேட்டை பகுதியில் 5 ஆண்டுகளாக 13 பிரிவுகளாக நடத்தப்பட்ட கணினி பயிற்சியில் 1500 இளைஞர்கள் கணினி பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மகளிருக்கான அவசியமான தொழிற்பயிற்சி என்றால் அது தையல் பயிற்சி. ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் தையல் பயிற்சி வீட்டிற்கு ஒருவர் பெற்றிருந்தால் உதவிகரமாக இருக்கும்.
அதேபோல் அழகு கலை பயிற்சி இப்போது ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கேற்ப அழகு கலை பயிற்சி எந்த அளவுக்கு அவசியமானது என்பது திருமணங்களுக்கு செல்லும் போது தெரியும். அழகு கலை பயிற்சி மற்றும் தையல் பயிற்சியை சைதை தொகுதியில் உள்ள மக்களுக்கு கற்றுத்தர முடிவெடுத்து முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. 90 தையற்கலை, 50 அழகுக்கலை பயிற்சி பெற மகளிருடன் தொடங்கப்பட்ட இம்மையத்தில் தற்போது தொடர்ந்து பயிற்சியினை அளித்து வருகிறது என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சைதை மேற்கு பகுதி செயலாளரும் சென்னை மாநகராட்சி 10-வது மண்டலக்குழுத் தலைவருமான எம். கிருஷ்ண மூர்த்தி, சைதை கிழக்கு பகுதி செயலாளர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் எம். ஸ்ரீதர், மோகன்குமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற மகளிர் கலந்து கொண்டனர்.



