ஆரல்வாய்மொழி, மார்ச் 12 –
தேரூர் பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பாலகிருஷ்ணன்புதூர், உதிரப்பட்டி, இந்திரா காலனி பகுதி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.
2023-2024 மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் பாலகிருஷ்ணன்புதூரில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் குழாய்கள் மூலம் பாலகிருஷ்ணன்புதூர், உதிரப்பட்டி, இந்திராகாலனி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேவையான தண்ணீர் அழகியபாண்டிபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் தேரூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் குழாய்கள் மூலம் பாலகிருஷ்ணன்புதூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு இதற்காக இப்பகுதிகளில் மினி குடிநீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா பாலகிருஷ்ணன்புதூரிலும் அதனைத் தொடர்ந்து உதிரப்பட்டியிலும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேரூர் பேரூராட்சித் தலைவர் அமுதாராணி தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஜெசீம், தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன், கவுன்சிலர்கள் வீரப்புத்திரப்பிள்ளை, சங்கரம்மாள் முருகன், கணேஷ், காஞ்சனா, மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் அக்சயா கண்ணன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப்பிரிவுச் செயலாளர் குமரகுரு, தலைமைக் கழக பேச்சாளர்கள் நாஞ்சில் மாதவன், நாஞ்சில் ஞானதாஸ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய அவைத் தலைவர் இசக்கிமுத்து, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முருகன், மணி, சுடலையாண்டிப்பிள்ளை, சுந்தரேசன், ஆறுமுகம், செல்லப்பன், மகேஷ், தங்கப்பன், அலெக்ஸாண்டர், வின்சென்ட், இசக்கியப்பன், கார்த்திக், பெருமாள் ஆசாரி, வேலாயுதம், பெருமாள், இசக்கி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



