தென்தாமரைகுளம், நவ. 27 –
தூத்துக்குடி மாவட்டம், தண்டு பத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (42). அவரது மனைவி ஜெய செல்வி (40). இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சாமிதோப்பு அருகே உள்ள கரும்பாட்டூரில் வாடகை வீடு எடுத்து தங்கி தேங்காய் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். மனைவி ஜெயசெல்வி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தகராறு செய்து
வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெய செல்வி கோபம் அடைந்து மது குடிக்க வேண்டாம் என கணவரை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த கண்ணன் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து மனைவி ஜெயசெல்வி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து ஜெயசெல்வி கொடுத்த புகாரின் பேரில் தென்தாரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


