தென்தாமரைகுளம், ஜூலை 27 –
திருநெல்வேலி மாவட்டம் லெவிஞ்சிபுரம் அருகே உள்ள மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (47). இவரது மனைவி தங்கநாயகி (37). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பாலமுருகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பாலமுருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து மது குடித்து விட்டு போதையில் பாலமுருகன் தென்தாமரைகுளம் அருகே நரியன்விளையில் உள்ள தலக்குளத்தில குளித்து கொண்டிருந்தார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூழ்கி இறந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் தென்தாமரை குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் பாலமுருகன் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி தங்கநாயகி கொடுத்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


