தென்காசி, ஆகஸ்ட் 12 –
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நன்னகரம் நியாய விலைக் கடையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக அவர்களது வீட்டிற்கே சென்று தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் நடக்கும் நியாய விலை கடைகளில் உள்ள 41,823 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், மேலகரம் பஞ்சாயத்து தலைவர் வேணி வீரபாண்டியன், துணைத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தென்காசி மண்டல நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



