போகலூர், ஆக. 5 –
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தாட்கோ மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் 2007 ஆம் ஆண்டு தூய்மை பணியாளர் என பெயர் மாற்றம் செய்து அங்கீகாரம் வழங்கிய தலைவர் ஆவார். இதற்கு முன்பு தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு பெயர்கள் இருந்து வந்த நிலையை கண்டு சமுதாயத்தில் அங்கீகாரமான சொல்லை தூய்மை பணியாளர்களுக்கு தந்தவர் டாக்டர் கலைஞர் அவர்களே.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்து அதற்கு தலைவர் உறுப்பினர்கள் நியமித்து தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். தூய்மை பணியாளர்கள் நல வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது போக தற்போது ரூபாய் 40 கோடி இருப்பில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேவைக்கேற்ப நலத்திட்டங்கள் வழங்குகின்ற அளவுக்கு தூய்மை பணியாளர் நல வாரியம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்த வாரியத்தில் தற்போது பணியாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் 25,000மும் மரணம் ஏற்பட்டால் 5 லட்சமும் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. விபத்து நிவாரணமாக ரூபாய் 50,000 மும் மரணம் அடைந்தவர்களுக்கு 8 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டி தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கையாக முன் வைக்க உள்ளோம். தற்போது தூய்மை பணியாளர் நல வாரியத்தில் மூன்று லட்சம் பேர் பதிவு செய்துள்ளார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 10 லட்சம் பேர் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கையை குறித்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்த கோரிக்கையாக ஊதிய உயர்வு குறித்தும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் அதாவது ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்க கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஊதியம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரிய துறை அலுவலர்களுக்கு தெரிவித்து ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும், அணிக்கு தேவையான உபகரணங்கள் தேவையான அளவு வேண்டும், வாரம் ஒரு நாள் விடுப்பு வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.
தற்போது தூய்மை பணியாளர்களை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்டு அறியப்பட்டு வருகிறது நிறைவாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தூய்மை பணியாளர்கள் நல வாரிய ஆணைய உறுப்பினர்களுடன் சேர்ந்து சந்தித்து அரசாணை 62 நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை மூலம் தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் பனிக்காலங்களில் செப்டிக் டேங்க் தூய்மைப்படுத்தும் பணிக்கு செல்ல வேண்டாம். சில நேரம் இதன் மூலம் விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகிறது. இப்பணிக்காக ஒரு சில மாவட்டங்களில் ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இங்கும் பயன்படுத்தப்படும் வகையில் ஐந்துக்கும் மேற்பட்ட இயந்திரம் வாங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும் எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க ரூபாய் 30 லட்சம் வரை வழங்குகிறார். இது மட்டும் இன்றி அரசால் எண்ணற்ற திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நான்கு கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஒவ்வொரு தொழிலாளியும் தங்கள் பிள்ளைகளை உயர்த்தல் வரை படிக்க வைத்து பயன்பெற வேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு நல வாரியத் தலைவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தாட்கோ மேலாளர் விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி, உதவி இயக்குனர் (ஊராட்சி) பத்மநாபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.