தஞ்சாவூர், ஜூலை 26 –
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஆடி அமாவாசையொட்டி புனித நீராடினர். ஆடி அமாவாசையொட்டி திருவையாறு காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு காவிரியில் புனித நீராடினர். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு ஐயாரப்பர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
இதனிடையே ஐயாரப்பர் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் புஷ்ய மண்டபபடித்துறையில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப் பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வழிபட்டனர்.
திருவையாற்றில் அப்பர் கயிலை காட்சி விழா திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் தென் கைலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் கைலாய காட்சி கொடுத்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனிடையே பிரச்சார மண்டபத்தில் காலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27-வது குருமாக்கா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.