திருவெண்ணெய்நல்லூர், ஆகஸ்ட் 01 –
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை நடந்தது. முன்னதாக நேற்று 31ந் தேதி சுந்தரர் திருமண கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், சிவபெருமான் அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சியும், ஆன்மீக சொற்பொழிவும் நடந்தது. மறுநாள் இன்று 01-ந் தேதி காலை 11:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குரு பூஜையும் நடந்தது. அப்போது அன்னத்தால் லிங்கம் அமைத்து சிறப்பு படையலுடன் மகேஸ்வர பூஜை நடந்தது.
பின்னர் சுந்தரர் அருட்சபை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு சுந்தரர் சிவ தீர்த்தத்தில் முதலை வாயிலிருந்து பிள்ளை தருவிக்கும் ஐதீக நிகழ்ச்சியும், இரவு 11:00 மணிக்கு சுந்தரர் வெள்ளை யானையில் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அறிவழகன், அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம், உறுப்பினர்கள் செல்வி, சக்கரவர்த்தி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.