அனுப்பர்பாளையம், ஜூலை 22 –
திருப்பூரை சேர்ந்த வாசுதேவன் என்பவர் fujipure என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் துணியிலிருந்து நூல் பிரித்து எடுத்தல், பாட்டில்களை உடைக்கும் இயந்திரம், பிளாஸ்டிக் அரவை இயந்திரம், கோன் வைண்டிங் என பல்வேறு இயந்திரங்களை விற்பனை செய்து வருகிறார். சுய தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என யூடியூப் மூலம் வீடியோ பதிவிட்டு கடந்த சில ஆண்டுகளாக பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாகவும் பணம் முழுமையாக கிடைப்பதில்லை இயந்திரம் தருவதில்லை பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறார் என தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் Fujipure நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்து நிறுவனம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் fujipure நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தான் எங்கும் தலைமறைவாகவில்லை எனவும் பணம் கொடுத்த மக்களுக்கு மீண்டும் முழு பணத்தையும் திருப்பித் தருவேன் என தெரிவித்தார்.
தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய கோதை நாச்சியார் என்பவர் ஏராளமான பணத்தை கையாடல் செய்து மோசடி செய்து விட்டதாகவும் அதன் காரணமாகத்தான் தன்னுடைய நற்பெயர் கெட்டு விட்டதாகவும் தன்னுடைய பெயரில் இருந்த நிலத்தை திமுக பிரமுகர் ஒருவரின் உதவியோடு கிரயம் பெற்றுக் கொண்டு அதற்கான பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றியதால் தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க முடியவில்லை எனவும் தன்னுடைய சொத்துக்கள் ஒவ்வொன்றாக விற்பனை செய்து அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவேன் என தெரிவித்தார். மேலும் கோதை நாச்சியார் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.