திருப்புவனம், ஜூன் 28 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட பெரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் திருப்புவனம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு கஞ்சா பறிமுதல் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு திருப்புவனம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து சார்பு ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம் மற்றும் பாரதிராஜா, தலைமை காவலர்கள் செந்தில் குமார், முத்துராமலிங்கம், இளையராஜா, முதல் நிலை காவலர் கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருப்புவனம் மற்றும் அங்காடி மங்கலத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளம் சிறார்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து வாகனத்தை திருடியது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவர்களுக்கு வாகனம் இல்லாததால் விலை உயர்ந்த பைக்கை ஆசைப்பட்டு திருடியதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.