நாகர்கோவில், ஜூலை 18 –
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன் வெளியிட்ட செய்தி குறிப்பில்: பெருந்தலைவர் காமராஜர் பற்றி தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக தன்னை ஈடுபடுத்தி கொண்டு பல உயரிய பொறுப்புகளையும் வகித்து வரும் திருச்சி சிவா போன்ற ஆளுமைகள் எந்த தவறான கருத்தையோ உண்மைக்கு புறம்பான வரலாற்றையோ பதிவு செய்திருப்பது தவறான போக்கு. அடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு அதி தீவிரமாய் பெற்று வரும் சமூகம் இந்த தமிழ் சமூகம். இந்த நிலம் அதன் வரலாறு, அதன் உண்மையான தலைமைகள் என்று சரியான புரிதலுடன் பயணித்து வரும் தமிழ் மக்களை சிறு அளவிலும் கூட தவறாக எடை போடாமல் இருப்பது இனி வரும் காலங்களில் நன்மை பயக்கும்.
பெருந்தலைவர் நம் தலைமுறையிலேயே வாழ்ந்து சிறந்து, மறைந்தும் பேரொளியாய் வாழ்பவர். அவருடைய அப்பழுக்கற்ற வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் காலம் தந்த கையேடு. யாரையோ துதி பாடி உண்மைக்கு ஒவ்வாத கருத்துகளை பகிர முற்படுகையில் சற்று கவனமுடன் பெருந்தலைவர் போன்ற காலத்தை வென்ற தமிழ் தலைவர்களை ஐயா திருச்சி சிவா கையாண்டிருக்க வேண்டும்.
ஒரு வகையில் இந்த நிகழ்வானது கட்சிகளை தாண்டி பெருந்தலைவர் மீது மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பையும் அவரின் நேர்மையான அரசியல் வாழ்விற்கு மக்கள் கொண்டிருக்கும் மரியாதையையும் நன்கு உணர்த்தி உள்ளது. பெருந்தலைவர் காமராசர் தமிழ் மண்ணின் அடையாளம். அவரது பிம்பம் உண்மையானது உறுதியானது. அவரது புகழ் எதிர் கால சந்ததிகளுக்கு சரியாக கையளிக்கப்படுவதே அறம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.