திமுகவின் பலமான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் திமுக வுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பிளவு பட்ட பாமக யாருடன் கூட்டணி அமைப்பது என்று யோசித்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் சேர பாமக முயற்சித்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். இருவருக்குள் அவ்வளவு கருத்து மோதல் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி ராமதாஸ் திமுக கூட்டணியிக்கு வந்தாரேயானால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று திருமாவளவன் பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசும் போது, டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் சந்தித்து பேசினால் போதும். திருமாவளவன் ஒத்துக்கொள்வார் என்கிற விதத்தில் வார்த்தைகளை விட்டிருக்கிறார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ பாலாஜி இதனை கண்டிக்கும் விதமாக சமுக வலைதளத்தில் செல்வ பெருந்தகையை விமர்சனம் செய்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சாதி ரீதியாக செயல்பட்டு வரும் பாமகவை திருமா ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். அப்படி பாமக, திமுக கூட்டணியில் சேர்ந்தால், நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். இதில் எந்த மாற்றமும் இருக்காது என்று சொல்கிறார்களாம் திருமாவின் தம்பிகள். இப்பிரச்சினை திமுகவுக்கு பெரும் தலைவலியை தான் கொடுத்துள்ளது. எனவே கடைசி நேரத்தில் திருமாவின் கரமே போதும் என்று திமுக தலைமை வந்து விடும் என்றும் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.
அப்படியானால் பாமக வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? டாக்டர் ராமதாஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என்று கேட்டால், தவெக இருக்கிறது அல்லவா என்று சொல்லுகிறார்கள். ஆக டாக்டர் ராமதாஸை திமுக கூட்டணி ஏற்றுக் கொள்ளவில்லை எனில், விஜயை பக்கம் சாயலாமா என்று பாமகவினர் யோசித்து வருகின்றனராம். இது போல் புதிய தமிழகம் கட்சி கூட தவெகவில் கூட்டணி வைக்கலமா என்று யோசித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கூட்டணியில் பேச்சு வார்த்தை நடத்தி வரும் டாக்டர் கிருஷ்ணசாமி, ஓட்டப்பிடாரம் தொகுதியை தனக்கு கேட்கிறாராம். ஓட்டப்பிடாரம் தொகுதியில் இதுவரையிலும், 5 முறை போட்டியிட்டு உள்ளார். அதில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். எனவே இந்த முறையும் ஓட்டப்பிடாரம் தொகுதி தனக்கே கிடைக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால் அத்தொகுதி ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் அதிமுக கூட்டணியில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தெரிகிறது. எனவே மனம் நொந்து போயுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி கடைசி நேரத்தில் தவெக கூட்டணியில் சேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று சொல்லுகிறார்கள் அரசியல் கருத்தாளர்கள். ஆக விஜய்யின் தவெகவுக்கு ஜாக்பாட் அடிக்க இருக்கிறது. விஜய் சேலத்திற்கு போயிட்டு வரட்டும்.அப்புறம் பாருங்கள், விஜய்யின் தவெகவுக்கு யாரெல்லாம் தாவுறாங்க என்று..இப்படி பட்ட பேச்சும் வர ஆரம்பித்து விட்டது.



