சுசீந்திரம், ஜீலை 26 –
சுசீந்திரத்திலிருந்து தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவகுளம், மாங்குளம், குறண்டி, கருப்புக்கோட்டை, கோதை கிராமம், புது கிராமம், தண்ட நாயகன் கோணம், குலசேகரன்புதூர் உட்பட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. இந்த குண்டும் குழியுமான சாலை நான்கு வழிச்சாலைக்கு பாலம் போடப்பட்ட பகுதியில் உள்ளது. அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியான இந்தச் சாலையில் குலசேகரன் புதூர் பகுதியைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலை பள்ளத்தில் விழுந்து பின் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். கீழத் தேருர் ஊரை சார்ந்த நபர் ஒருவர் சாலையில் உள்ள பள்ளத்தை அறியாமல் விழுந்து பின் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சரியாக பேச முடியாத சூழ்நிலையில் உள்ளார். அதுபோல கஸ்தூரிபாய் கிராமம் பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதுபோல அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடமாக இந்த இடம் உள்ளது. இது குறித்து தினதமிழ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சுசீந்திரம் காவல் நிலையத்திலும் விபத்து ஏற்பட்டது குறித்து மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தினதமிழ் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை அறிந்த சுசீந்திரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் பொதுமக்கள் பாதிப்பை அறிந்து சாலையை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க இந்து அறநிலையதுறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனும் நேற்று குண்டும் குழியுமான இடத்தை தற்காலிகமாக சரல் மண் அடித்து சரி செய்யும் பணியை நேற்று செய்தனர். இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சுசீந்திரம் காவல்துறையினருக்கும் பிரபா ராமகிருஷ்ணனுக்கும் நன்றி தெரிவித்து செல்கின்றனர். ஏற்கனவே குலசேகரன் புதூர் முதல் சுசீந்திரம் வரை புதிய சாலை போடும் பணி ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிடப்பில் போடப்பட்ட பணியை மீண்டும் துவங்கி இனியும் உயிர் பலி ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவார்களா என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.