ஆரல்வாய்மொழி, செப். 06 –
திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை நடைபெற்ற போதைப்பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டத்தினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கிராம வளர்ச்சி மையம் மற்றும் அருமநல்லூர் ஊராட்சி மக்கள் இணைந்து நடத்திய போதைப்பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம் இன்று காலை திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை நடைபெற்றது. இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கிராம வளர்ச்சி மையம் மற்றும் அருமநல்லூர் ஊராட்சி மக்கள் இணைந்து நடத்துகின்ற போதைப் பொருளுக்கு எதிரான மாராத்தான் தொடர் ஒட்டம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற சிறப்பான அம்சமாகும். எதிர்கால தலைமுறையினர், இளைஞர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். இதற்கு தடையாக இருந்து வருகின்ற போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்க வேண்டும். இதற்கு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியமானதாகும். அவர்களும் இதனை உணர்ந்து நல் ஒழுக்கத்தோடு போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் நல் வழியில் பயணிக்க வேண்டும். அப்போது தான் நாடும், வீடும் சிறப்படையும். வளமான இந்தியா உருவாக இளைய தலைமுறையினரின் பங்கு மிக முக்கியமானதாகும். முற்றிலும் போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன். சுந்தர்நாத், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், கழக வழக்கறிஞர் ஷாஜகான், ராஜேந்திரன், முகமது ராபீக், தோவாளை வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் வெங்கடேஷ், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மலேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



