தாராபுரம், செப்.15:
தாராபுரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருப்பதாகவும், குறிப்பாக தாராபுரம் தொகுதி அதிமுகவின் வலிமையான தொகுதி என்றும் தெரிவித்தார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய அவர், அவரது கணவர் அதிமுகவில் இருந்து பல்வேறு வசதிகளை அனுபவித்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்திருப்பது மிகப்பெரிய துரோகம் என விமர்சித்தார். ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்ததை தாராபுரம் மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.
மேலும், தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத தேர்தல் நடத்தப்படுவதாகவும், தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளும் முக்கியமானதாக இருக்கும் என்றும், அதிமுக மீண்டும் சிலிர்த்து எழும் என்றும் கூறினார்.
சோதனை காலத்தில் அதிமுகவுடன் இருக்காமல் தவெகவுக்கு சென்றுவிட்டதாகவும், அதிமுகவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தற்போது தவெகவில் இணைந்திருப்பது என்ன தர்மம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மரகதம், சத்தியபாமா ஆகியோரே “துரோகத்தின் அடையாளம்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
வரும் புதன்கிழமை அதிமுக வேட்பாளர் பானுமதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒரே பக்கம் இருப்பதை மக்கள் பார்க்கப் போகிறார்கள் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.



