நாகர்கோவில், ஆகஸ்ட் 5 –
தர்மபுரம் ஊராட்சியில் 2020 ஜனவரி 5 முதல் 2025 ஜனவரி 5 வரை ஊராட்சி தலைவராக ரங்கநாயகி கணேசன் இருந்தார். அவரது காலத்தில் ஊராட்சியில் நடந்த வரவு, செலவு மீதான தணிக்கை அறிக்கையில் 2020-21ம் ஆண்டு ரூ. 70, 84, 118 நிதி இழப்பு செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆட்சேபனையின் அடிப்படையில் நிதி இழப்பு தொகை ரூ. 26,30,928 என இறுதி செய்து கடந்த ஜனவரி 1ம் தேதி கலெக்டரால் தண்டச்சான்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் தொகையை 15 சதவீத வட்டியுடன் ஊராட்சி கணக்கில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 7 மாதம் ஆகியும் தண்டச்சான்று தொகையை செலுத்தவில்லை. எனவே முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கநாயகி கணேசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திடவும், நிதி இழப்பு தொகையை வசூலிக்க வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வசாமி தலைமை வைத்தார். முன்னாள் எம்பி பெல்லார்மின் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.