தருமபுரி, ஜூலை 25 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டறங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 486 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
அதன் அடிப்படையில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உதவி ஆணையர் நர்மதா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுப்ரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையது முகம்தீன் இப்ராகிம், மாவட்ட வழங்கள் அலுவலர் செம்மலை, மாவட்ட ஆதி திராவிட அலுவலர் தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் செண்பகவள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.