தருமபுரி, ஜூன் 24 –
தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறந்த முறையில் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
அவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும், உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் மனம் தளராமல் உயர்கல்வியில் சேர்ந்து அனைவரும் வாழ்க்கை தரத்தில் மேம்பட வேண்டும். மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டில் 12- ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையம் ஆட்சியர் அலுவலகவளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளியின் இடை நின்ற மாணவர்கள் அனைவரும் இந்த ஆலோசனை மையத்தின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றைப் பெற்றோர் குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இலங்கை அகதிகள், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பிற நலிவுற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ் பெறுவது தொடர்பாகவும், கல்வி கடன் பெறுவது தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். 12 – ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஐ டி ஐ , பாலிடெக்னிக் மற்றும் திறன் பயிற்சி போன்ற படிப்புகளில் சேர்வதற்கான உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



