நாகர்கோவில், ஏப்ரல் 21 –
சீர்திருத்தங்களை கொண்டு வருவேன் எனக் கூறி தமிழக மக்களை ஆட்சி செய்ய முற்படும் முன்னாள் நடிகரும் இந்நாள் அரசியல் கட்சித் தலைவருமான விஜய் ஒரு முற்போக்கு சிந்தனைவாதி என இன்றைய இளைய தலைமுறையினர் நினைத்து கடும் வெயிலிலும் அவருக்காக காத்து நிற்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மக்களை காக்கவும், மக்களுக்கு நல்லது செய்யவும் நினைத்து அரசியல் களத்திற்கு விஜய் வந்துள்ளார் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் விஜயின் எண்ணம் அனைத்தும் வேறு. அவர் திரைத்துறை மூலம் கிடைக்கும் பணத்தை உதறி தள்ளிவிட்டு வந்துவிட்டதாக நாம் நினைத்து உள்ளோம். ஆனால் அவருடைய எண்ணம் ரசிகர் கூட்டங்களை காட்டி தன்னை எதிர்த்த சில முக்கிய தலைவர்களை எதிர்க்கவே அரசியல் களத்திற்கு வந்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக சீர்திருத்தம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை முன்னெடுத்தல் போன்ற கொள்கைகள், பெரியார் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களைப் பின்பற்றி, அவற்றை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் கொண்டு செல்வதாக கூறும் விஜய், இதுவரை ஒரு நிகழ்ச்சியில் கூட இன்றைய இளம் தலைமுறையினர்கள் மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று கூறியது இல்லை.
திரைப்படத்தில் ஹீரோவுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான ஜனங்கள் இருப்பதாக காண்பிக்கப்படுவதை விஜய் நிஜ வாழ்க்கையிலும் சாத்தியப்படுத்த மட்டுமே முயற்சி செய்து வருகிறார்.
இவர் தமிழ்நாட்டு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த நினைத்திருந்தால் தான் நடித்த திரைப்படங்களின் டிக்கெட் கட்டணத்தை தன்னுடைய போராட்ட குணத்தினால் மாற்றி இருக்கலாமே; ஒரு திரைப்படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் பல நூறு கோடிக்கும் மேல் உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய சம்பளத்தை சில ஆயிரங்களுக்கு உள்ளாகவோ, இல்லை ஐந்து லட்சத்திற்கு உள்ளாகவோ வாங்கி இருக்கலாமே ஏன் அப்படிச் செய்யவில்லை சிந்திக்க வேண்டாமா? தமிழ்நாட்டு மக்களை டிக்கெட் கட்டணம் மூலம் சுரண்டிய இவர் தமிழக மக்களுக்கு நல்லது செய்வாரா? தனது நடிப்பால் தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினரை கவர்ந்து வைத்திருக்கும் விஜய் திரைப்படம் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏன் அவர் ஒரு நடிகராக மட்டுமே இத்தனை ஆண்டு காலம் இருந்து விட்டார்?
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் அப்போதே அவருக்கு வந்திருக்க வேண்டாமா? தமிழ்நாட்டு மக்கள் எத்தனையோ விதமான போராட்டங்களை போராடி இன்றளவும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். தமிழ்நாடு மக்களுக்கு எதிராக மத்தியில் ஆளும் அரசு எத்தனையோ விதமான அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் கொண்டு வந்த போது போராடியவர்கள் திராவிட கட்சியை சேர்ந்த தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர்களும் தானே.
அப்போது எல்லாம் வாயை மூடி மௌனமாக பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து விட்டு திடீரென தமிழ்நாட்டு மக்களை காக்க போகிறேன் எனக் கூறி கட்சியையும் கொடியையும் அறிமுகப்படுத்தி இளைய சமுதாயத்தினரை கொளுத்தும் வெயிலில் இரையாக்கி, பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல உயிரை காவு வாங்கிவிட்டு காக்க வந்த கடவுள் போல் தன்னை காண்பிக்கும் விஜய் சினிமாவில் போராளியாக நடித்திருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் வீதியில் இறங்கி போராடியது உண்டா? தமிழ்நாட்டு மக்களுக்காக சிறை சென்றது உண்டா? இதில் எதுவும் கண்டிராத நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள் கல்விக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மும்மொழி கொள்கைக்காக நிறுத்தி வைத்த போது மூன்றெழுத்து நடிகையுடன் இன்ப உலா சென்றது ஞாபகத்திற்கு வரவில்லை போலும்.
இன்று அரசியல் களத்திற்கு வந்துவிட்டு காமராஜர் கல்வி மையங்கள் அமைப்பேன் என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? சமூக சீர்திருத்தவாதி பெரியார் கொள்கையை கடைபிடிப்பதாக கூறும் விஜய் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டு தலைவர்களுடன் கைகோர்த்து போராடி இருக்க வேண்டாமா? மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்த காமராஜரை கொள்கை தலைவனாக ஏற்றுக்கொண்ட விஜய் மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்திற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டாமா?
மேலும் தமிழக வேலைவாய்ப்பில் 75% தமிழக இளைஞர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் ஒரு உத்தரவாதம் கொடுத்திருந்தார். தமிழ்நாட்டில் முக்கிய துறைகளிலும், பொறுப்புகளிலும் வட மாநிலத்தவர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட போது எதிர்த்து ஒரு குரல் கூட கொடுக்கவில்லை. அப்பொழுது வாயை மூடி வேடிக்கை பார்த்த நீங்கள் இப்பொழுது எப்படி 75% தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உத்தரவாதம் தர முடியும்?
இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் அடங்கிய மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் பாக்ஸ் ஆபீஸ் வசூல், மன்னனாக திகழ்ந்த விஜய் நிஜத்திலும் தமிழ்நாட்டு மக்களை ஆள வேண்டும் என்று துடிப்பதில் ஒரு துளி அளவு கூட நல்லெண்ணம் இல்லை எனவே கூறலாம்.
விஜயின் அரசியல் பயணத்தால் இளைஞர்கள் சீரழியும் நிலை ஏற்படும் என்றும், ரசிகர்கள் சிலர் கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்றும், சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் விஜய்யை பார்க்கத் துடித்து அவரை நெருங்கும் போது அவருடைய பாதுகாவலர்களால் தூக்கி வீசப்பட்ட கொடூர சம்பவங்களும் இந்த தமிழ் மண்ணில் நடந்துள்ளது. அதேபோல் ஒரு ரசிகர் அவரை பார்க்கத் துடித்து நெருங்கும் போது அவர்கள் தன்னை நெருங்காமல் இருக்க ஓடி ஒளிந்த விஜய் தமிழ் மக்களின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் வருவது சாத்தியமா?
ஒரு தலைவன் சொன்னால் தொண்டன் கேட்பான். ஆனால் விஜயை பார்க்கக்கூடும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும்போது ஏன் விஜய் அவர்களிடம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வலியுறுத்தவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறையினர் சிந்திப்பதிலும் செயல்படுவதிலும் அதிக வல்லமை பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய திரைப்பட பாடல்களின் இசையை தனக்காக கூடும் கூட்டத்தில் இசைக்க வைத்து இளம் தலைமுறையினரை மெய் மறக்க வைத்து வரும் திரை நடிகர் விஜய் நிஜத்திலும் மக்கள் முன் நடித்து ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. இதையே தாரக மந்திரமாக பயன்படுத்தி தன்னுடைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் அதிகமான மக்கள் கூடும் வரை இசையை இசைக்க விட்டும் தான் வந்து பேசும் போதும் இடையிடையே தனது திரைப்பட இசையை இசைத்தும் இளம் தலைமுறையினரையும், குழந்தைகளையும் ஒருவித மயக்கத்திற்கு கொண்டு சென்று வைத்திருப்பது விஜயின் வாடிக்கை.
இளம் தலைமுறையினர் போதையின் மயக்கத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதையும், அதற்காக தான் எடுக்கப் போகின்ற முயற்சி குறித்தும் இதுவரை எந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் விஜய் தெளிவுபட கூறவில்லை. காரணம் மயக்கத்தில் இருந்தால் தான் தன்னை மறக்காமல் இருப்பார்கள் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.
மேலே சுட்டிக்காட்டிய அனைத்தையும் இன்றைய இளம் தலைமுறையினர் நன்றாக சிந்தித்து நம்மை ஆள தகுதியான நபர் யார் எனவும், இது திரை மறைவில் நடக்கின்ற கதாபாத்திரமல்ல; மக்களை யார் ஆட்சி செய்தால் மக்களாட்சியும் ஜனநாயகமும் நிலைத்திருக்கும் என்பதை நினைவில் கொண்டு ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவதே இந்த செய்தி தொகுப்பின் நோக்கமாகும்.



