தருமபுரி, ஜனவரி 20 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் தேவகி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரந்தர அரசு பணியிடங்களாக நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் பணிக்கொடை நிதி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் குறைந்த பட்சம் 9 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளான 43 ஆண்டு சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வழங்குவதாக கூறிய திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். சாலை மறியலால் சேலம் – தருமபுரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் வளர்மதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயா உள்ளிட்ட 300 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம், காத்திருப்பு போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், மறியல் போராட்டம் என பல்வேறு வகையில் போராடி வந்தாலும் திமுக அரசு தேர்தலில் வழங்கிய வாக்குறுதி வெறும் ஓட்டுக்காக மட்டும் தான் என்பது போல் பாரா முகமாக இருந்து வருவதால் அரசு ஊழியர்களின் போராட்டம் உக்கிரமடைந்து வருகிறது.



