தஞ்சாவூர், ஜூலை 5 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள் ரூபாய் 2 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் பள்ளியக்கிரஹாரம், ஸ்ரீஹரி நகர், டவுன் கரம்பை, கும்பகோணம் பாத்திமாபுரம், தாராசுரம் கோட்டையூர் ஆகிய இடங்களில் தலா 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகர நல வாழ்வு மையங்களும், கும்பகோணம் திப்பிராஜபுரத்தில் 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும் என தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 2 கோடியே 45 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீஹரி நகரில் புதிய மாநகர் நலவாழ்வு மையத்தில் அமைச்சர் கோவி. செழியன், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்பி, எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனை செய்துகொண்ட அமைச்சர் கோவி. செழியன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் கண்ணன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) கலைவாணி, மாநகராட்சி நல அலுவலர் நமச்சிவாயம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா மாநகராட்சி கவுன்சிலர் செந்தமிழ் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.