தஞ்சாவூர், ஜூலை 25 –
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் படிக்கும் 20 வயது மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு அதே கல்லூரியில் முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்கும் மாணவரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 35) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத் திடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் செய்தார். மேலும் சக மாணவிகள் 100க்கும் அதிகமானோர் வகுப்பறைகளை புறக்கணித்தனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மாணவிகள் மீண்டும் வகுப்புக்கு சென்றனர்.
இதையடுத்து கல்லூரி விசாகா கமிட்டி குழுவில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோபிநாத் ஒரு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கோபிநாத்தை கைது செய்தனர்.