தஞ்சாவூர், ஜூலை 28 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மொழியியல் துறையில் நிறுவப்பட்டுள்ள தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்வு இருக்கையில் மொழியியல் பணிகளுக்கு சான்றாக ராபர்ட் கால்டுவெல் கொள்கைகளுக்கான தற்கால திராவிட மொழி தரவுகள் என்னும் தேசிய கருத்தரங்கம் பதிவாளர் (பொறுப்பு) பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது.
கருத்தரங்கில் கால்டுவெல் கூறும் திராவிட மொழிகள் ஒப்பாய்விற்கு கூடுதல் சான்றாக பல்வேறு மொழிகளின் அமைப்புகளை எடுத்துக் கூறினர். கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் கருணாகரன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் அரங்கன் வாழ்த்துரை வழங்கினார்.
கருத்தரங்கில் கால்டுவெல் ஆய்விருக்கையின் ஆய்வுத் தகைஞர் பேராசிரியர் நடராசப் பிள்ளை நோக்கவுரையாற்றினார். கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. இதில் இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனம் மைசூரில் இருந்து ராமமூர்த்தி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட மொழியியல் வல்லுநர்கள் கலந்து கொண்டு கட்டுரை வாசித்தனர். முன்னதாக மொழியியல் துறை தலைவர் மங்கையர்க்கரசி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக முனைவர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.