தஞ்சாவூர், ஜூலை 30 –
மனதின் குரல் நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த மணி மாறனை பாராட்டி பிரதமர் மோடி பேசியதாவது: பல நூற்றாண்டுகளாக ஓலை சுவடிகள் வடிவில் பாதுகாக்கப்படும் ஞானமே பாரதத்தின் உண்மையான சக்தியாகும். இந்த மரபை போற்றி பாதுகாப்பது தான் மிகப் பெரிய பொறுப்பு. இத்தகைய ஊக்கமளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மணி மாறன். தமிழ் ஓலை சுவடிகள் படித்து புரிந்து கொள்ளும் முறையை கற்றுக் கொடுத்துள்ளார். இதனால் இன்று பல மாணவர்கள் இந்த கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஓலை சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவு செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சாவூரை சேர்ந்த மணி மாறனின் பணி பாராட்டுக்குரியது. சில மாணவர்கள் இந்த கையெழுத்து பிரதிகளை அடிப்படையாக கொண்ட ஒரு ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர். பண்டைய காலத்து பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். பின்னர் தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும். அங்கு உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் அறிவியல் மரபுகளைக் கற்றுக் கொள்ள முடியும். இவை வெறும் கையெழுத்து பிரதிகள் அல்ல, இவை இந்தியாவின் அத்தியாயங்கள். நாம் வரும் தலைமுறைக்கு வழி காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகரான தமிழ் பண்டிதர் மணி மாறன் தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், வரலாற்று நோக்கில் தமிழிலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்நாடு இந்து சமய அறநிலைத் துறையில் கோவில்கள் மறுசீரமைப்புக்குழு, மாநில சுவடிகள் பாதுகாப்பு இயக்கம், தமிழ் பல்கலைக் கழக சுவடியில் துறை பாடத்திட்ட குழு, யுனெஸ்கோ அமைப்பில் திருக்குறள் அங்கீகாரம் பெறுவதற்கான குழு போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார்.