தஞ்சாவூர், ஆகஸ்ட் 11 –
தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் தமாக தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் சுதாகர் முப்பனார், முன்னாள் எம்எல்ஏக்கள் விடியல் சேகர், ராஜாங்கம், ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட தலைவர் கௌதமன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசினார். மாநில நிர்வாகிகள் முனவர் பாட்சா, திருச்சி தர்மராஜன் என்.ஆர். நடராஜன், பி.எல்.ஏ. சிதம்பரம், சிவ முரளிதரன், டெல்டா மண்டல இளைஞர் அணி தலைவர் திருசெந்தில், தஞ்சை மாநகர தலைவர் வெங்கட்ராமன், செய்தி தொடர்பாளர் கோவி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.
பின்னர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெற்றி வியூகத்தில் அடிப்படையில் த.மா.க தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக இளைஞர் அணி மண்டல கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவான ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். பா ஜனதாவை திமுக எதிர்க்கட்சியாக பார்க்காமல் எதிரி கட்சியாக பார்க்கிறது. தேர்தல் கண்ணோட்டத்திலேயே செயல்படுவதால் பல திட்டங்களை தமிழகத்திற்கு திமுக வால் பெற்று தர முடியவில்லை.
தோல்வி பயத்தின் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகளை வைத்துள்ளது. தொடர்ந்து இந்தியா கூட்டணி பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் தேர்தல் வரும் சில மாதங்களுக்கு முன்பே தேர்தல் ஜுரம் காரணமாக ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என நினைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்கள் பொய்யான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள்.
காமராஜ் போல மறைந்த முன்னாள் அமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரண்டு தலைவர்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்தார்கள். அவர்கள் ஜாதி, மதம், மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டு மறைந்தும் மறையாமல் மக்கள் மனதிலே நிற்பவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தவறான கருத்து கூறியிருந்தால் அது தவறு.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பது என்பதை விட தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கில் மிக மோசமான மாநிலமாக உள்ளது. அதிமுக ஆட்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது நாள் தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள் என்பது எங்களைப் போன்ற எதிர்க்கட்சியினுடைய குற்றச்சாட்டு அல்ல, ஊடகங்களில் முக்கிய செய்தியாக வருகிறது. தமிழக அரசு சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முடியாது என்பதை நிரூபித்து விட்டது. மக்கள் அரசினுடைய இயலாமையை புரிந்து கொண்டார்கள். தேர்தலிலே சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.



