தஞ்சாவூர், ஆகஸ்ட் 11 –
தஞ்சாவூரில் ஆயர் டி. சகாயராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தஞ்சாவூர் மறை மாவட்ட ஏஸ்.சி, எஸ்.டி, பி.சி பணிக்குழு சார்பில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மறை மாவட்ட ஆயர் டி. சகாயராஜ் தலைமை தாங்கினார். முதன்மை குரு ஜோசப் ஜெரால்டு, மறை வட்ட அதிபர் பிரபாகரன், பல்நோக்கு சேவை மையத்தை சேர்ந்த ஆர்.கே. அடிகள், மறை மாவட்ட மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திமுக மாநகர செயலரும் மேயருமான சண். ராமநாதன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணை 1950 பத்தி – 3 ஐ உடனே நீக்க வேண்டும். மதத்தின் பெயரால் தலித் மக்களை பிரிக்க வேண்டாம். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பரிந்துரைகளை உடனே செயல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே அமுல்படுத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இதில் பணி குழு செயலாளர் விக்டர் தாஸ், அகஸ்டின் ராஜ் உள்பட மறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சின்னம் அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென மழை பெய்தது. மழையில் நனைந்தபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



