தக்கலை, ஜூன் 29 –
திருவிதாங்கோடு புதுத்தெரு பகுதி சேர்ந்தவர் மகாதேவன் (66). இவர் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி மதியம் சுமார் ஒரு மணி அளவில் மகாதேவன் கடையில் இருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைக்கு வந்துள்ளார். அவர் தனது மனைவிக்கு இரண்டு தங்க காப்புகள் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். உடனடியாக மகாதேவன் நகைகளை காட்டியுள்ளார். அவற்றின் விலை மற்றும் விவரங்களை விசாரிப்பது போல் அந்த நபர் அடுக்கடுக்காக பேச்சு கொடுத்துள்ளார்.
உரிமையாளர் மகாதேவனின் கவனத்தை திசை திருப்பி அந்த மர்ம நபர் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிராம் எடையுள்ள தங்க காப்பை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அவர் சென்ற பின் நகைகளை சரிபார்த்த போது நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த மகாதேவன் இது குறித்து தக்கலை போலீசில் புகார் அளித்தார். திருடப்பட்ட தங்க காப்பின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் ரூபாய் என தெரிய வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் நகையை திருடும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பட்டபகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


