பரமக்குடி, ஜூலை 8 –
பரமக்குடி கிழக்கு பகுதியில் திறக்கப்படவுள்ள மதுக்கடையை திறக்க கூடாது என வலியுறுத்தியும், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரியும், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மதுரை வீரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் காஜா நஜ்முதீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பசுமலை, மாவட்ட துணைச் செயலாளர் வேந்தை சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமலட்சுமி, பசும்பொன் செய்யது அப்தாகிர், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வைகை பாசன விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் ராமநாதபுரம் சிவகங்கை விவசாய சங்கத்தினர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.