விழுப்புரம், அக். 22:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். 10 நாட்களாகியும் சிறுமி கண்டுபிடிக்கப்படாததால், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், சிறுமியை கண்டுபிடிக்க முடியாத அரசையும் காவல்துறையையும் கண்டித்தார். மேலும், ராணிப்பேட்டையிலும் குழந்தை காணாமல் போன சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், காணாமல் போன சிறுமியை விரைந்து கண்டுபிடிக்கவும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



