கன்னியாகுமரி, ஜூன் 28 –
2005 -ம் ஆண்டு கட்டி வழங்கப்பட்ட சுனாமி குடியிருப்புகளுக்கு 20 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாமலிருப்பதை கண்டிப்பதோடு இந்த ஆண்டிலாவது வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கும் வருவாய்த்துறைக்கும் அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: 2024 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமிப் பேரிடரில் கடலோர கிராமங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. பல ஆயிரம் உயிர்கள் பலியானது, பல்லாயிரம் குடியிருப்புகளை கடல் விழுங்கியது. அந்த பேரிடரிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலமாக அரசு வீடுகட்டி குடியமர்த்தியது.
அந்த குடியிருப்புகளுக்கு ஒப்படைப்பு நமுனா என்ற ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை வைத்து மீனவர்களால் வேறு எந்த நலத்திட்டங்களோ வங்கிக் கடன்களோ பெறமுடியவில்லை. ஒப்படைப்பு நமுனா என்ற ஒன்றுக்கும் உதவாத காகிதத்தைத் திரும்பப் பெற்றுவிட்டு நிரந்தர வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்து போராடி வருகிறது.
நிரந்தர பட்டா இந்த ஆண்டு தருகிறோம். அடுத்த ஆண்டு தருகிறோம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்களும் வருவாய்த்துறையும் வாக்குறுதி மட்டும் வழங்கி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இனிமேலும் பொறுப்பதற்கில்லை என்று சுனாமி காலனி குடியிருப்புவாசிகள் கொதித்துப்போய் இருக்கின்றனர். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுனாமி குடியிருப்புகளுக்கு நிரந்தர வீட்டுமனைப் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம். இவ்வாறு குறும்பனை பெர்லின் தனது மனுவில் கூறியுள்ளார்.