சுசீந்திரம், ஜூலை 31 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் நல்ல மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் ஆடி மாதம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சொந்தமான வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து சுவாமிகளுக்கு படைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கும் நிறைப்பு அரிசி விழா நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டு நிறைப்புத்தரிசி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோவிலுக்கு சொந்தமான வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை மேளதாளங்கள் முழங்க தாணுமாலய சுவாமி கோவில் நடராஜமூர்த்தி சன்னதியில் வைத்து பின்பு தாணுமாலயசுவாமி கோவிலுக்குள் கொண்டு வந்து அனைத்து சுவாமிகளுக்கும் நெற்கதிர்கள் படைக்கப்பட்டு தாணுமாலய சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்பு நெற்கதிர்களை வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இந்த நெற்கதிர்களை தங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்திருந்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதுபோல கடந்த 13 நாட்களுக்கு முன்பு தாணுமாலய சுவாமி கோவிலில் தாணுமாலய சுவாமிக்கும் திருவேங்கடவ விண்ணவப் பெருமாளுக்கும் தினந்தோறும் காலை 10.30 மணி அளவில் தங்க குடத்தில் சந்தனம், சவ்வாது, பன்னீர், கோரசனை, குங்குமப்பூ கலந்த களபத்தால் மேள, தாளங்கள் முழங்க ஆடி களப அபிஷேகம் நடைபெற்று வந்தது.
இறுதி நாளான இன்று காலை நீலகண்ட சாமி சன்னதி அருகே ஆடிவாச ஹோமம் பூஜை நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டனர்.