சுசீந்திரம், செப். 24 –
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன்புதூர் கால பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சந்தனகுமாரி (34). இவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று சந்தனகுமாரி கணவர் சுரேஷ் உடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷின் தம்பி முருகன் (30) சந்தனகுமாரியிடம் ஏன் என் அண்ணனிடம் சண்டை போட்டு கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சந்தனகுமாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை வலது பக்க கையில் குத்தினார். இதில் முருகனுக்கு ரத்தம் கொட்டியது. இதையடுத்து முருகனை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முருகன் சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சுசீந்திரம் போலீசார் சந்தனகுமாரி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


