தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான மக்களின் பயண நெரிசலைக் கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம்
பண்டிகைக் காலங்களில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். எனவே, கட்டணம் ரத்து செய்யப்படும் நாட்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடுதல் போலீஸ், ஆம்புலன்ஸ் வசதி
மேலும், பண்டிகைக் கால நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், அவசர மருத்துவ உதவி மையங்கள் மற்றும் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மக்களின் நேரம், பாதுகாப்பு மற்றும் நிம்மதியான பயணத்திற்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



