தேனி, ஜூலை 6 –
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதிகளில் முக்கிய சாலைகளில் இருபுறமும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (விபி ஜி ராம் ஜி) மூலம் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் பின்னர் அந்த மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைத்தும், தண்ணீர் ஊற்றியும் பராமரிப்பு செய்யாததால் மரக்கன்றுகள் அனைத்தும் கருகி நாசமாகின. ஊராட்சியின் அலட்சிய போக்கால் பல லட்சம் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளன. எனவே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் இதுபோன்ற பணிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் தனி கவனம் செலுத்தி ஊராட்சி பகுதியை பசுமை பகுதியாக மாற்றும் சூழலை உருவாக்க வேண்டும் எனவும் கண்துடைப்பிற்காக செய்யப்படும் இது போன்ற பணிகளால் எவ்வித பலனும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததோடு சில்வார்பட்டி ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரிப்பு செய்யாமல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சில்வார்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கோரிக்கை எழுந்துள்ளது.



