கொல்லங்கோடு, ஜூலை 25 –
குமரி மாவட்டத்தில் பைபர் படகில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இந்த மண்ணெண்ணையை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடத்தலை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வருவாய்த்துறையினர், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் கண்டு கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் கொல்லங்கோடு பகுதியில் நேற்று முன் தினம் இரவு சுமார் 9 மணி அளவில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஏற்றிக்கொண்டு கேரள பயணிகள் ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. தகவலின் பேரில் கொல்லங்கோடு போலீசார் கண்ணநாகம் பகுதியில் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 9 கேன்களில் 300 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோவில் இருந்த சதீஷ்குமார் (39) ஜெயா (43) ஆகியோரை பிடித்தனர். தொடர்ந்து மண்ணெண்ணெய், ஆட்டோவை பறிமுதல் செய்து அவற்றை நாகர்கோவில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைத்தனர்.