மார்த்தாண்டம், ஆக. 7 –
கொல்லங்கோடு அருகே பன விளையை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். மீன் வியாபாரி. இவர் மனைவி நிஷா (43). நீரோடி பகுதியில் உள்ள கான்வெண்டில் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள நகைக்கடையில் கடந்த வருடம் மே மாதம் 52 கிராம் நகைகளை இரண்டு தடவையாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். இந்த வருடம் மே மாதம் அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்து நகைகளை மீட்க சென்றுள்ளார்.
அப்போது நகை அடகு கடையில் இருந்த பணியாளர்கள் நகையை மீட்கும் பணத்தை பெற்றுக் கொள்ளாமல் உரிமையாளர் இல்லை போன் செய்து விட்டு வரக் கூறி நகைகளை கொடுக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர். தங்கம் விலை ஏறிக்கொண்டே போவதால் அடமானம் வைத்து நகை கிடைக்காதோ என்று கருதிய நிஷா உரிமையாளர் மீது கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது நகையை சட்ட விரோதமாக வைத்திருப்பதால் அதை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
புகார் மீது கொல்லங்கோடு போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பியிடம் கடந்த மே மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் புகார் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் கொல்லங்கோடு போலீசார் நகை கடை உரிமையாளர் மீது நேற்று சி எஸ் ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.