விழுப்புரம், ஜூலை 10 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் தற்பொழுது துவங்கப்பட்டாலும் தூய்மை பணியினை அங்கீகரித்து தூய்மை பணியாளர்களின் நலனை காத்திடும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலங்களில் தூய்மை பணியாளர்கள் அர்ப்பணிப்போடு தூய்மைப் பணிகள் மேற்கொண்டதினாலே பெருமளவிலான மக்களின் உயிரை காப்பாற்றியதில் பெரும் பங்காற்றி உள்ளார்கள். இப்படிப்பட்ட சிறப்பான பணியினை மேற்கொண்ட தூய்மை பணியாளர்களை நாம் அங்கீகரிப்பதோடு அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்று சேர்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இந்த நல வாரியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் தூய்மை பணியாளர்கள் பதிவு செய்வதன் மூலம் தங்களுக்கான நலவாரிய அட்டை கிடைக்க பெறும். நலவாரிய அட்டையில் உள்ள உறுப்பினர் எண் மட்டும் இருந்தால் போதும். தங்களுக்கான அரசின் திட்டங்கள் எளிதாக கிடைக்க பெறுவதற்கு வழிவகை ஏற்படும். தற்போது தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் நபர்களின் பிள்ளைகள் படித்து உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் நல வாரியத்தின் மூலம் பள்ளி மற்றும் உயர் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து தாட்கோ மூலம் 17 தூய்மை பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ரூ.124500 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகை திருமண உதவித்தொகை கல்வி உதவித்தொகைக்கான நிதி உதவியும் 105 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் என மொத்தம் 122 தூய்மையானவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், துணைத் தலைவர் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் கனிமொழி பத்மநாபன், தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ் குமார், மாநில உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் கண்ணன், ராஜன், சீனிவாசன், ஹரிஷ் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.