கன்னியாகுமரி, ஜூலை 12 –
அஞ்சுகிராமம் போலீசாருக்கு கொட்டாரம் அருகே குருசடி குளக்கரையில் வாலிபர் ஒருவர் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து குமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின், நாகர்கோவில் ஏஎஸ்பி லலித்குமார், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், அஞ்சுகிராமம் உதவி ஆய்வாளர் பிரிய ராஜ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தது குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே பாலகிருஷ்ணன் நகரை சேர்ந்த தொழிலாளியான கிருஷ்ணன் (65) என்பவரது மூத்த மகன் எலக்ட்ரீசியன் ஐயப்பன் (33) என்பது தெரிய வந்தது. மேலும் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து எதற்காக நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது? அதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.