ஈரோடு, ஜூன் 30 –
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 2025 – 2026 ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட்டின் அறக்கட்டளை தலைவர் டாக்டர் குமாரசுவாமி தலைமையில் நடந்தது.
கல்லூரி தாளாளர் தங்க வேல் வரவேற்றார். செயலாளர் சத்தியமூர்த்தி பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சுவாமி யோகா மிருதானந்தர் இதில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் வருங்கால வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைய அருளாசி வழங்கி பேசினார்.
சிறப்பு விருந்தினராக கோவையை சேர்ந்த படைப்பாளர் முத்தையா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் ஏட்டுக்கல்வியைத் தாண்டி நடைமுறை வாழ்வியலையும் கற்றுத் தேர்ந்து சிகரம் தொட வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனி திறமைகள் உள்ளன. அதனால் யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். வாழ்க்கை தனித்துவமானது என்றும் சுடராய் பிரகாசித்து காட்டுத்தீயாய் பரவுங்கள். சிலந்தி வலையில் சிக்காத சிறுத்தைகளாக இருங்கள். தன்னம்பிக்கை சார்ந்த பல்வேறு எழுச்சியூட்டும் சிந்தனைகளோடு செயல்பாடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலராக பி.சி. பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி இறுதித்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
விழாவில் ஈரோடு கொங்கு பொறியில் கல்லூரியின் தாளாளர் இளங்கோ, கொங்கு பாலிடெக்னிக் மற்றும் கொங்கு நேச்சுரோபதி ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை தாளாளர் வெங்கடாசலம், கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி டிரஸ்ட்டின் உபதலைவர் கிருஷ்ணன், இணைச்செயலாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் கல்லூரியில் மாணவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் குமரகுரு நன்றி கூறினார்.