நாகர்கோவில், ஜூன் 28 –
தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குளறுபடி ஏற்பட்டு பலர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக கூறி கூட்டுறவு சங்க இணை பதிவாளர் நடுக்காட்டு ராஜா அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா புகார் அளித்தார். அப்போது எம்.எல்.ஏ க்களாக இருந்த பிரின்ஸ், ராஜேஷ்குமார், சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ், உள்பட கண்டால் தெரியும் நபர்கள் தன்னை தாக்கியதாக கூறியிருந்தார். இது தொடர்பாக எம்.எல்.ஏ. க்கள் உள்ளிட்டோர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் ஜேஎம் – 1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளும் ஆஜராகி இருந்தனர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 30ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.