திருப்புவனம், ஆக. 27 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் கூடத்துப்பட்டி கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ஏகதந்த விநாயகர் நூதன மடாலயம் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கூடத்துப்பட்டி ஸ்ரீ ஏகதந்த விநாயகர் நூதன மடாலயம் கும்பாபிஷேக விழா நடத்த இரண்டு மாதத்திற்கு முன்னர் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல் நாள் காலை யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கால யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள புனித நீர் கலசங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்து கோபுரத்திற்கு காலை 9:30 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு விழா கமிட்டி சார்பில் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.



