மார்த்தாண்டம், ஆக. 19 –
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 2:30 மணிக்கு போதையில் களியலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தலை மற்றும் கையில் அடிபட்ட காயத்ததுடன் சிகிச்சைக்கு வந்து உள்ளார்.
அந்த நேரத்தில் விபத்தில் காயமடைந்த ஒரு நபரும், மற்றொரு நபர் மாரடைப்பால் சிகிச்சை பெற வந்து உள்ளார். அந்த நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த நேரத்தில் போதையில் சிகிச்சைக்கு வந்த நபர் டாக்டர் மற்றும் நர்ஸ்களை மற்றும் மருத்துவமனை ஊழியர்களை ஆபாசமாக தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார்.
மருத்துவமனை ஊழியர்கள் சமதானப்படுத்தியும் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் வந்த நேரம் சிசிடிவி காட்சிகள் வாங்கி தாருங்கள் என்று கூறி சிகிச்சை பெறாமல் போலீசார் முன்னிலையில் ஆபாச வார்த்தை பேசி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரும் மருத்துவமனை ஊழியர்கள் அவரோடு போராடி சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசாரும் ஒரு வழியாக போதை ஆசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அந்த நபர் மீது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஐந்து பேர் கையெழுத்திட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் போதை இறங்கியவுடன் விபரீதத்தை உணர்ந்த ஆசாமி அதிகாலையில் தலைமறைவாகிவிட்டார். அவர் போதையில் இருந்ததால் சரியான பெயரோ முகவரியோ தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம் போலீசார் டாக்டர் லியோ ஜான் கொடுத்த புகாரின் பேரில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் தகாத வார்த்தையால் பேசியதாகவும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை தேடி வந்தனர். கடையல் பிலாந்தோட்ட விளையைச் சேர்ந்த குமார் (35) கைது செய்யப்பட்டார். இவர் லாரி டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.



